ஆன்மிகம் குறித்த புதிய தகவல்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை கோவிலின் கோபுரங்கள்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்த ஒரு பிரம்மாண்ட ஆலயமாகும். இக்கோவிலில் நான்கு பிரதான கோபுரங்கள் மற்றும் உள் கோபுரங்கள் என மொத்தம் 9 கோபுரங்கள் உள்ளன. இந்த ஒன்பது கோபுரங்களும் ஒன்பது நுழைவாசல்களாகக் கருதப்படுவதால், திருவண்ணாமலை ‘நவதுவார பதி’ என்றும் அழைக்கப்படுகிறது.
வடக்கு ராஜகோபுரம் (அம்மணி அம்மாள் கோபுரம்): இதன் உயரம் 171 அடி ஆகும். இது 11 நிலைகளையும் 13 கலசங்களையும் கொண்டது. விஜயநகர மன்னர்களின் கட்டிடக்கலை அம்சங்கள் இக்கோபுரத்தில் அதிகம் காணப்படுகின்றன. அம்மணி அம்மாளின் பெரு முயற்சியால் இக்கோபுரம் கட்டி முடிக்கப்பட்டதால், அவரது பெயரே இதற்கு சூட்டப்பட்டுள்ளது.
கிழக்கு ராஜகோபுரம் (வல்லாள மகாராஜா கோபுரம்): திருவண்ணாமலை ஆலயத்தின் பிரதான ராஜகோபுரம் இதுவே ஆகும். இக்கோபுரத்தின் கட்டுமானப் பணிகள் 1318 முதல் 1340 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றதாக கல்வெட்டுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. கிருஷ்ணதேவராயர் 1550களில் இக்கோபுரத்திற்கான அடித்தளத்தை 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அமைத்தார். தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தின் 216 அடி உயரத்தை விட ஒரு அடி கூடுதலாக, 217 அடி உயரத்தில் இக்கோபுரத்தைக் கட்ட அவர் எண்ணினார். எனினும், பணி நிறைவடைவதற்கு முன்பே கிருஷ்ணதேவராயர் காலமானார். இதையடுத்து, சில ஆன்மிகப் பெரியோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கர் இக்கோபுரத்தை 217 அடி உயரத்தில் கட்டி முடித்தார். இந்தக் கோபுரம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய ராஜகோபுரமாக விளங்குகிறது. 11 நிலைகளைக் கொண்ட இதில் விஜயநகர மன்னர்களின் கட்டிடக்கலை அம்சங்கள் சிறப்பாகக் காணப்படுகின்றன.
கிளி கோபுரம் (பேய்க்கோபுரம்): திருவண்ணாமலை கோவிலில் உள்ள கோபுரங்களிலேயே மிகவும் பழமையானதாக இது கருதப்படுகிறது. கிழக்கு ராஜகோபுரத்திற்கு நேர் மேற்குப் பகுதியில் இது அமைந்துள்ளது. இது ‘பேய்க்கோபுரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
தெற்கு கட்டை கோபுரம்: திருமஞ்சன கோபுரத்திற்கு அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் ‘தெற்கு கட்டை கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இக்கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இருமுடி உணர்த்தும் தத்துவம்
ஐயப்ப பக்தர்கள் தாங்கள் தலையில் சுமந்து செல்லும் இருமுடியின் தத்துவத்தை அறிவது அவசியம். பூவுலகில் ராஜசேகரன் மன்னனின் மகனாக மணிகண்டன் (ஐயப்பன்) வாழ்ந்தபோது, புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றார். அப்போது, குலதெய்வமான சிவபெருமானை துணைக்கு அழைப்பது போல் மூன்று கண்ணுடைய தேங்காயை எடுத்துச்செல்ல மன்னன் மணிகண்டனுக்கு ஆலோசனை வழங்கினார். அவரும் அப்படியே செய்தார். இன்றும் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் இருமுடி சுமந்து செல்வதன் மூலம் இந்த மரபைக் கடைபிடித்து வருகிறார்கள்.
இருமுடியில் ஒருபுறம் பக்தனுக்குத் தேவையான பொருட்கள் இருக்க, மறுபுறம் ஆண்டவனுக்குச் செலுத்த வேண்டிய காணிக்கைப் பொருட்கள் இருக்கும். யாத்திரை முடியும் நேரத்தில் ஐயப்ப பக்தன் தனக்கென்று கொண்டுவந்த பொருட்களை எல்லாம் காலி செய்துவிடுகிறான். ஆண்டவனின் பதினெட்டு படிகளைக் கடந்து நெருங்கும்வரைதான் தனக்கென பொருட்கள் தேவைப்படுகின்றன. ஆண்டவனை நெருங்கியவுடன் நமக்கென்று எதுவும் தேவை இல்லை; அனைத்தும் அவனுக்கே அர்ப்பணம் ஆகிவிடுகிறது என்பதே இருமுடியின் தத்துவமாகும்.
