புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அவர் புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே ஏர்போர்ட் மூர்த்திக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஏர்போர்ட் மூர்த்தி கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.
குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. ஏர்போர்ட் மூர்த்தி தரப்பு வழக்கறிஞர், அரசியல் காரணங்களுக்காகவே இந்தச் சட்டம் போடப்பட்டதாக வாதிட்டார்.
விசாரணையின் முடிவில், நீதிபதிகள் ஏர்போர்ட் மூர்த்தி மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து, புழல் சிறையில் இருந்த அவர் இன்று விடுவிக்கப்பட்டார். சிறை வாயிலில் நடிகை கஸ்தூரி உட்படப் பலர் காத்திருந்து, அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
