மாம்பழம் சின்னம் வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கில், தேர்தல் ஆணையம் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாமகவின் தலைமை குறித்து ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், வரவிருக்கும் தேர்தலுக்கான மாம்பழம் சின்னத்தை அன்புமணி ராமதாஸ் முகவரிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கி கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த கடிதத்தை எதிர்த்து ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், “அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் கடந்த மே மாதமே முடிவடைந்துவிட்டது. அவர் பாமக தலைவர் என்று போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கக்கூடாது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக எனக்குத்தான் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். எனவே, அன்புமணிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை ரத்து செய்து, எனக்கு கடிதம் அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், அன்புமணி ராமதாசுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கியது தொடர்பாக, தேர்தல் ஆணையம் மூன்று வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

Scroll to Top