விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் நில அதிர்வு: ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவு, மக்கள் அச்சம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இதன் காரணமாக அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.

இரவு 9:10 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சுற்றியுள்ள கிருஷ்ணன் கோவில், செங்குளம், கம்மாபட்டி, மல்லி, இந்திரா நகர், பூவாணி, பாட்டக்குளம், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளிலும், ராஜபாளையத்தைச் சுற்றியுள்ள மொட்டை மலை, தென்றல் நகர், மலையடிப்பட்டி ஆகிய பகுதிகளிலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3 ஆகப் பதிவான இந்த நில அதிர்வால், வீடுகளில் இருந்த பாத்திரங்கள் கீழே விழுந்தன. இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் பொதுமக்கள் வீதிகளில் திரண்டனர்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நாலாட்டின்புதூர், விஸ்வநாததாஸ் நகர், இந்திரா நகர், சுபா நகர், பாண்டவர்மங்கலம், சாய் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9:15 மணியளவில் சில வினாடிகள் நில அதிர்வு ஏற்பட்டது. இங்கும் வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்ததால், மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உணரப்பட்ட நில அதிர்வின் தாக்கம், தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி வரையிலும் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டிலும் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top