சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் இழுபறி மற்றும் நிச்சயமற்ற நிலை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைவதற்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகத் தெரிகிறது.

மெஜாரிட்டி உறுதியானது: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த டிவிிகே-விற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகள் தங்களது ஆதரவை உறுதிப்படுத்தின. சனிக்கிழமை மாலை ஆளுநரை நேரில் சந்தித்த விஜய், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் பிகரை விஜய் எட்டியதை அடுத்து, ஆளுநர் அதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை பதவியேற்பு? கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணிக்கு தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளதாகத் தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் ரகசியமாகத் தொடங்கப்பட்டுள்ளதாகவும், ஆளுநர் மாளிகையிலிருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணிநேரங்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய அத்தியாயம்: திராவிடக் கட்சிகளின் பல தசாப்த கால ஆதிக்கத்திற்குப் பிறகு, ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள விஜய், முதல்வராகப் பொறுப்பேற்க இருப்பது தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் டிவிிகே தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.