தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 88 விழுக்காட்டினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் இருப்பது போன்ற ‘தர்க்கரீதியான முரண்பாடுகள்’ காரணமாக இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டதாகத் தெரிகிறது.

நீக்கப்பட்ட வாக்காளர் பெயர்கள் குறித்த ஆட்சேபணைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜனவரி 30 அன்று நிறைவடையவுள்ள நிலையில், பல லட்சம் வாக்காளர்களுக்கு தங்கள் பெயர்கள் நீக்கப்பட்டதே தெரியாமல் உள்ளது.

வாக்காளர் பட்டியல் தொடர்பான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் நீக்கம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தமிழ்நாட்டுக்கும் ஏன் நீட்டிக்கப்படக்கூடாது என நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினர்.

மேற்கு வங்கத்தில், ‘தர்க்கரீதியான முரண்பாடுகள்’ அடிப்படையில் நீக்கப்பட்ட சுமார் 1.36 கோடி வாக்காளர்களின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றவும், அவற்றை கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் அனைவரும் பார்க்கும் வகையில் ஒட்டிவைக்கவும் ஜனவரி 19 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்கள் நேரில் அல்லது தங்கள் பிரதிநிதி மூலம் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கவும், பட்டியல் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து ஆட்சேபணைகளைத் தாக்கல் செய்ய கூடுதல் 10 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டது.

இதே நடைமுறையை தமிழ்நாட்டுக்கும் பின்பற்ற முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.