காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த கடும் மோதலில் படுகாயமடைந்து, மீண்டு வந்து வீரதீரச் செயலை ஆற்றிய இந்திய ராணுவ வீரர் ஏ. மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு, மத்திய அரசு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. கடந்த ஜூன் 8-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து அவர் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார். தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த இவரின் வீரகாவியம் இதோ:

வீரத்தின் எல்லை: மீனாட்சி சுந்தரம்

2024 டிசம்பர் 19 அதிகாலை 3.30 மணி. காஷ்மீரின் ஒரு கிராமத்தில் மறைந்திருந்த 5 தீவிரவாதிகளை 100 பேர் கொண்ட ராணுவப்படை சுற்றி வளைத்தது. இருவர் கொல்லப்பட்ட நிலையில், மீதமுள்ள மூவர் மேல் தளத்திற்குச் சென்று தப்பிக்க முயன்றனர். அவர்கள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக, நான் உறுதியாக நின்று தாக்குதலைத் தொடங்கினேன். பதிலுக்கு அவர்கள் சுட்டதில், குண்டு எனது தாடையைக் கிழித்து, வலது மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை வழியாக ஊடுருவியது. அந்த இக்கட்டான நிலையிலும் நான் நகராமல் தாக்குதல் நடத்த, சக வீரர்கள் வந்து அந்த மூவரையும் சுட்டு வீழ்த்தினர்.

சிறுவயது கனவு நனவானதுதேனியில் சிறிய மெஸ் நடத்தி வரும் என் தந்தை அய்யப்பனின் கனவு, என்னைப் ராணுவ வீரராக்குவது. 10-ம் வகுப்பு முதலே கடினமாக உழைத்தேன். நாள்தோறும் அதிகாலை, மாலை நேரங்களில் நீண்ட தூரம் ஓடி பயிற்சி எடுத்தேன். தேனியில் நடந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை வென்றேன். 2017-ல் ராணுவத்தில் சேர்ந்தபோது, எனது ஊரே பெருவிழாவாகக் கொண்டாடியது. 2024-ல் ராணுவத்தின் துணிச்சலான பிரிவான ’34 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ்’ படையில் இணைந்தேன்.

அமரன் பட பாணியில் ஒரு நிஜம்தீவிரவாதிகளை வேட்டையாடும் எங்களின் வீரத்தைப் பறைசாற்றும் வகையில் உருவானதே ‘அமரன்’ திரைப்படம். அந்தப் பணியின்போது நான் காயமடைந்தாலும், என்னை மீறி அவர்களைப் போகவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். காயம்பட்ட என்னை சக வீரர் ஒருவர் தோளில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அந்த நேரத்தில் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த என் மனைவியின் நினைவுதான் வந்தது. நான்கு மாத சிகிச்சைக்கும் பின், இன்று கீர்த்தி சக்ரா விருது பெற்றுள்ளது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பெருமை.

Tags: #IndianArmy #KirtiChakra #MeenakshiSundaram #TamilHero #Theni #GallantryAward #IndianSoldiers #CounterTerrorism #ArmyLife #ProudMoment #TamilNadu