Highlights:
[‘பாமக மற்றும் பாஜக இடம்பெறும் கூட்டணியில் விசிக இணையாது என்பதில் திருமாவளவன் உறுதி.’, ‘தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின்போது ஏற்பட்ட பிளவின்போது தமிழ் உணர்வாளர்கள் ராமதாஸையே ஆதரித்ததாக திருமாவளவன் ஆதங்கம்.’, ‘தன்னைத் தலைவராக ஏற்றுக்கொள்வதில் தமிழ்ச் சமூகம் தயக்கம் காட்டியதாகவும், கடுமையான போராட்டத்திற்குப் பிறகே இந்த நிலையை அடைந்ததாகவும் விசிக தலைவர் பேச்சு.’, ‘2026 தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு விசிக முட்டுக்கட்டையாக இருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.’]

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணிக் கணக்குகள், தொகுதிப் பங்கீடுகள் குறித்த விவாதங்கள் ஒருபுறம் இருக்க, திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற யூகங்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஒரு பொது மேடையில் தனது கடந்தகால அரசியல் வலிகள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.

முன்பு மருத்துவர் ராமதாஸும், தானும் இணைந்து ‘தமிழ் பாதுகாப்பு இயக்கம்’ நடத்திய காலத்தை நினைவுகூர்ந்த திருமாவளவன், தேர்தல் அரசியலால் இருவரும் பிரிய நேரிட்டபோது நேர்ந்த கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். “நானும் அவரும் பிரிந்தபோது, தமிழ் உணர்வாளர்கள் யார் பக்கம் நின்றார்கள்? அனைவரும் வலுவான நிலையில் இருந்த ராமதாஸ் பின்னால்தான் சென்றார்கள். என்னை தமிழ்ச் சமூகம் அவ்வளவு எளிதாக ஏற்கவில்லை,” என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

மேலும், “அவரைத் தமிழினக் காவலர் என்று கொண்டாடியவர்கள் யாரும் எனக்கு ஆதரவாக நிற்கவில்லை. பல போராட்டங்களைக் கடந்து, முட்டி மோதித்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்,” எனத் தனது அரசியல் பயணத்தின் சவால்களை அவர் பட்டியலிட்டார். திமுக கூட்டணியில் பாமக இணைந்தால் விசிகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, “பாஜக அல்லது பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது என்பதில் நாங்கள் 14 ஆண்டுகளுக்கு முன்பே உறுதியாக முடிவெடுத்துவிட்டோம்; அதில் எந்த மாற்றமும் இல்லை,” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


Topics: #திருமாவளவன் #ராமதாஸ் #விசிக #பாமக #2026சட்டமன்றதேர்தல் #திமுககூட்டணி #தமிழ்நாடுஅரசியல்