வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாக உள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மருத்துவர் ராமதாஸ் உடனான தனது கடந்தகால பிரிவு குறித்து வேதனையுடன் பேசியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (திமுக) கூட்டணி சேர விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

முன்னதாக, பாமக, பாஜக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்றும், பாமக குறித்த விசிகவின் முடிவு 14 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டுவிட்டதாகவும், அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய திருமாவளவன், ‘மருத்துவர் ராமதாஸும், நானும் இணைந்து தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தை நடத்தினோம். தேர்தல் காரணங்களுக்காக நானும் அவரும் பிரிய நேர்ந்தபோது, தமிழ் உணர்வாளர்கள் யார் பின்னால் சென்றார்கள்? எல்லோரும் வலுத்தவரான ராமதாஸ் பின்னால் சென்றுவிட்டார்கள். ஏன் திருமாவளவன் பின்னால் அவர்களால் வர முடியவில்லை? எது தடுத்தது? அவரை தமிழினக் காவலர் எனக் கொண்டாடிய ஒருவர் கூட திருமாவளவனுக்கு ஆறுதலாக நிற்கவில்லை. முட்டி மோதிதான் திருமாவளவன் இன்று இந்த இடத்தில் நிற்கிறார். என்னை அவ்வளவு எளிதாக இந்த தமிழ்ச் சமூகம் ஏற்கவில்லை. என் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை’ என்று குறிப்பிட்டார்.