சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ‘பராசக்தி’ திரைப்படம் பிப்ரவரி 7 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார்.
இந்தி மொழித் திணிப்பின்போது தமிழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சியை மையமாக வைத்து ‘பராசக்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தணிக்கைத் துறையினரால் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில் திரையிடப்பட்ட இந்த திரைப்படம், ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
திரையரங்குகளில் பெரும் வெற்றியைப் பெற்ற ‘பராசக்தி’ திரைப்படம், வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் பார்வைக்கு வரவுள்ளது.
