மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைப்பது தொடர்பான ஊகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணிக்கு இழுக்க வேண்டிய அவசியம் பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை. திரைப்படத் துறையில் சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள்; போவார்கள். அவர்களால் அரசியல் களத்தில் பெரிய தாக்கம் இருக்காது” என்று தெரிவித்தார்.

மேலும், “திரைப்பட உலகில் ரசிகர்களை வைத்திருப்பதும், அதை வாக்குகளாக மாற்றுவதும் முற்றிலும் வேறுபட்ட விஷயங்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இதுவரை விஜய்யுடன் எந்தவித கூட்டணிப் பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை” என்றும் பியூஷ் கோயல் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த அவர், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றியடைவது அவ்வளவு கடினம் அல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஊழல் மற்றும் தமிழ் விரோத கலாசாரத்தால் தமிழ்நாடு மக்கள் மிகவும் வெறுப்படைந்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டார்.