- 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது தவெக.
- ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவை.
சென்னை: தமிழகத்தில் ‘விசில்’ சத்தத்தை அதிரவிட்ட விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK), ஆட்சி அமைக்கத் தேவையான மேஜிக் எண்ணான 118 இடங்களை எட்ட முடியவில்லை. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியைப் பிடிக்க இன்னும் 10 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கட்டாயமாகிறது. அந்த 10 பேர் யார்? எந்தக் கூட்டணியில் இருந்து வருவார்கள்? என்பதே இப்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. தேர்தல் களத்தில் பாஜக மற்றும் திமுகவை விஜய் நேரடியாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், இந்த இரு கட்சிகளில் ஒன்றின் உதவியை நாடுவாரா அல்லது மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் தரப்பில் சாதகமான சூழல்: திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தற்போது தவெக பக்கம் சாய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேரடியாக விஜய்க்கு போன் செய்து 15 நிமிடங்கள் உரையாடினார். அதன் பின் அவர் திமுக தலைவர் ஸ்டாலினிடமும் பேசினார். இதனைத் தொடர்ந்து, ஏஐசிசி தமிழக பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் முக்கிய கருத்தைப் பகிர்ந்துள்ளார். விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்துப் பேசிய அவர், தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை மேலிடத்திற்குத் தெரிவித்துள்ளதாகவும், அவர்களின் வழிகாட்டுதலின்படி அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
சிறிய கட்சிகளின் மீது பார்வை: தவெக ஆட்சி அமைக்க 10 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக, அதிமுக, திமுக அல்லாத மற்ற சிறிய கட்சிகள் விஜய்யுடன் இணைய ஏற்கனவே ஆர்வம் காட்டி வந்தன. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணியில் உள்ள விசிக 2, சிபிஐ 2, சிபிஎம் 2 மற்றும் தேமுதிக 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளன. இவை தவிர, என்டிஏ கூட்டணியில் உள்ள பாமக 4, அமமுக 1 இடத்தைப் பிடித்துள்ளன. இவர்களின் ஆதரவைத் தவெக பெறுமா என்பது பொறுத்திருந்துதான் தெரியும்.
பிரதமரின் வாழ்த்து: பிரதமர் மோடி எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட கருத்தில், என்டிஏ-விற்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், விஜய்யின் வெற்றிக்கும் வாழ்த்து தெரிவித்தார். தமிழர்களின் நலனை முன்னெடுத்துச் செல்ல மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், தவெக-வை என்டிஏ கூட்டணியில் இணைக்க தமிழக பாஜக நிர்வாகிகள் பலமுறை விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில், பாஜக, அதிமுக அல்லது இதர கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து ஏதேனும் புதிய முன்மொழிவுகள் வருமா என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஆட்சி அமைப்பது குறித்து தவெக தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
