கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிந்தைய வன்முறைச் சம்பவங்கள் அடங்குவதற்குள், மாநில அரசியலை உலுக்கும் விதமாகப் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரியின் தனி உதவியாளர் (PA) சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் முன்னிலையில் துணிகரம்
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மத்யம்கிராம் பகுதியில் புதன்கிழமை இரவு இந்த பயங்கரம் அரங்கேறியது. சுவேந்து அதிகாரியின் நிர்வாக உதவியாளராகப் பணியாற்றி வந்த சந்திரநாத் ரத், சாலையில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கும்பல் அவரை வழிமறித்தது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், சற்றும் அச்சமின்றி மிக அருகாமையில் இருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் சோகம்
துப்பாக்கிச் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்திரநாத் ரத், உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
போலீஸ் படை குவிப்பு – தீவிர விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்த உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள், தடயங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
“இது திட்டமிட்ட அரசியல் படுகொலையா?” என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் ஒரு முக்கியத் தலைவரின் உதவியாளரே கொல்லப்பட்டிருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்தப் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
தற்போது மத்யம்கிராம் பகுதியில் பதற்றம் நிலவுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
