டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, இந்திய அணி தனது முதல் இருதரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஆனால், அயர்லாந்துக்கு (Ireland Vs India) எதிரான முதல் போட்டியிலேயே இந்திய அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி குறித்துப் பேசிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா (Abhishek Sharma), ஆடுகளத்தின் சூழலுக்கு மிக விரைவாகத் தங்களை மாற்றிக் கொள்ளாததே தோல்விக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார். இப்போட்டியில் 49 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மாவே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோரர் ஆவார்.

இதுகுறித்து அபிஷேக் சர்மா கூறுகையில், “ஆடுகளத்தின் நிலவரத்திற்கு நாம் எவ்வளவு சீக்கிரம் பழகுகிறோம் என்பது மிகவும் முக்கியம். தற்போதைய காலகட்டத்தில் நாம் அடுத்தடுத்து தொடர்ச்சியாகப் போட்டிகளில் விளையாடி வருகிறோம். பயிற்சி அமர்வுகள் கிடைக்கும் போதோ அல்லது ஆடுகள சூழலைப் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கும் போதோ, ஒரு அணியாக இணைந்து அதற்கு ஏற்ப நம்மை விரைவாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு வலுவான அணியாக நாம் சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி மாற வேண்டும், ஆனால் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் அது சாத்தியப்படவில்லை” என்று கூறினார்.

அது அரைசதம் அல்ல!

இப்போட்டியில் அயர்லாந்து அணி நிர்ணயித்த 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் (5), இஷான் கிஷன் (1), ஸ்ரேயாஸ் ஐயர் (3) ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். மறுமுனையில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா, 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 20 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முன்னதாக, அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், அபிஷேக் எதிர்கொண்ட 5-வது பந்தில் எடுக்கப்பட்ட ஒரு ரன் ‘லெக்-பை’ (Leg-by) வடிவில் கிடைத்தது ஆகும். தவறுதலாக அது அபிஷேக்கின் கணக்கில் சேர்க்கப்பட்டதால், பின்னர் அந்த ரன் நீக்கப்பட்டது. இதனால் அவர் 49 ரன்களையே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: #IndiaVsIreland #AbhishekSharma #T20Cricket #TeamIndia #CricketNews #SanjuSamson #IshanKishan