போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளரான சீனிவாசன் என்பவர், தனது மகனுக்கு வேலை வாங்குவதற்காக கடந்த திமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சிவசங்கரை அணுகியுள்ளார். அப்போது மாநகர போக்குவரத்து கழகத்தில் (MTC) உதவி பொறியாளர் (Assistant Engineer) வேலை வாங்கித் தருவதாகக் கூறியதை அடுத்து, பல தவணைகளாக மொத்தம் ₹23 லட்சம் பணம் கைமாறியுள்ளது.
ஆனால், நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கித் தராமலும், வாங்கிய பணத்தை திருப்பித் தராமலும் ஏமாற்றியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சீனிவாசன், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதற்கட்டமாக, முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளரான இளஞ்செழியன் என்பவரை கடந்த 24-ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.
இந்த மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு நேரடியாக தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிப்பதற்காக, அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது சம்மன் அனுப்பியுள்ளனர்.
Tags:
#DMK #Sivasankar #JobScam #ChennaiCrimeBranch #MTCJobFraud #TamilNaduPolitics #PoliceSummons #ChennaiNews
