பெங்களூருவில் உள்ள கேப்ஜெமினி (Capgemini) நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வரும் டேகேரில் (Day care) குழந்தைகள் உடல்ரீதியாக சித்திரவதை செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண் அந்த டேகேரில் பணியாற்றி வந்தவர் என்றும், வைரலான வீடியோக்களில் அவர் பதிவாகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அந்த வீடியோ காட்சிகளில் காணப்பட்ட மற்ற ஊழியர்களுக்கும் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் விசாரணை அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்தவுள்ளனர். இது தொடர்பாக வியாழக்கிழமையன்று மூன்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களிடமும் போலீசார் பேசினர்.

இந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வசதிக்காக, வளாகத்திலேயே இந்த டேகேர் மையம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு விடப்படும் இரண்டு முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகள் அழுதாலோ, குறும்பு செய்தாலோ, அங்கு வேலை செய்யும் ஆயாக்கள் அவர்களை கடுமையாக மிரட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

குழந்தைகளை உடல்ரீதியாக துன்புறுத்துவது போன்ற சில அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் வாட்ஸ்அப்பில் பரவின. குழந்தைகளை ஃபிரண்ட்-லோடு (Front load) வாஷிங் மெஷினுக்குள் அடைப்பது, வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமர வைப்பது, டாய்லெட் ஜெட் ஸ்ப்ரேயை பயன்படுத்தி வாயில் தண்ணீர் அடிப்பது போன்ற கொடூரமான செயல்களில் அவர்கள் ஈடுபட்டதாக வந்த புகார்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து சைல்டு ஹெல்ப்லைனுக்கு (Child Helpline) புகார் வந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: #Capgemini #Bengaluru #ChildAbuse #DaycareAbuse #Arrest #CrimeNews #TamilNews #KarnatakaPolice