திரைப்படத்தை சட்டவிரோதமாக 1.20 கோடி பேர் பார்த்துள்ளனர்: உயர்நீதிமன்றத்தில் போலீசார் தகவல்

சென்னை:முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக ஆன்லைனில் கசிந்த நிலையில், அதனை 1.20 கோடி பேர் பார்த்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அரசியலுக்கு வந்த பிறகு நடிகர் விஜய்யின் கடைசி படம் என்று பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட ‘ஜன நாயகன்’, சென்சார் சிக்கல்களை எதிர்கொண்டதால் திரையரங்குகளுக்கு வராமல் ஆன்லைனில் கசிந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் (KVN) அளித்த புகாரின் பேரில், சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பலரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களில் ரஜினி மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஆன்லைனில் சட்டவிரோதமாகக் கசிந்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை சுமார் 1.20 கோடி பேர் பார்த்துள்ளதாக போலீசார் நீதிமன்றத்தில் விளக்கமளித்தனர்.

மேலும், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கினால் அவர்கள் சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

போலீசாரின் இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags (குறிச்சொற்கள்):#JanaNayagan #CMVijay #TamilCinema #Piracy #MadrasHighCourt #CyberCrime #KVNProductions #OnlineLeak #ChennaiNews

Scroll to Top